
லெபனான் உடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, இன்று காலை இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலானது.
லெபனான் நேரப்படி இன்று (நவ.27) அதிகாலை 4 மணிக்கு இஸ்ரேல்-லெபனான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அமலாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸ் மேற்கொண்ட மத்தியஸ்தத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன், `இது லெபனானுக்கான புதிய தொடக்கம்’ என்றார்.
லெபனானுடனான போர் நிறுத்தத்திற்கு நேற்று (நவ.26) மாலை ஒப்புதல் அளித்தது இஸ்ரேல் அமைச்சரவை. இதைத் தொடர்ந்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, `போர் நிறுத்த உடன்படிக்கையை லெபனான் மீறும் பட்சத்தில் உடனடியாக அதற்கான பதிலடி கொடுக்கப்படும்’ என்றார்.
மேலும், லெபனானுடனான இந்தப் போர் நிறுத்தம் காஸா மீது முழுமையான கவனத்தைச் செலுத்தவும், ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்கவும் இஸ்ரேலுக்கு உதவும் என கருத்து தெரிவித்துள்ளார் பிரதமர் நெதன்யாகு.
இது தொடர்பாக பேசிய நெதன்யாகு, `காட்சியில் இருந்து ஹிஸ்புல்லா வெளியேறும் பட்சத்தில், ஹமாஸ் மட்டும் இருக்கும். அதன் மீதான நமது அழுத்தம் தீவிரமடையும். பிறகு ஹமாஸை அழித்தொழிக்கும் பணியை மேற்கொள்வோம். பிணயக் கைதிகள் அனைவரையும் மீட்போம். காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வோம்’ என்றார்.
போர் நிறுத்த நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த 60 நாட்களுக்குள் லெபனானில் இருக்கும் தங்களின் துருப்புகளை இஸ்ரேல் திரும்பப் பெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், தெற்கு லெபனானில் மீண்டும் தன் படைகளை ஹிஸ்புல்லா குவிக்காததை உறுதி செய்யும் வகையில் அந்தப் பகுதி லெபனான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.