பதவி விலகும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ!

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய அரசு நேரடியாகச் சம்மத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார் ஜஸ்டின் ட்ரூடோ.
பதவி விலகும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ!
ANI
1 min read

உட்கட்சியில் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, இந்த வாரத்திற்குள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் எனவும், அதன்பிறகு அந்நாட்டிற்குப் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடைசியாகக் கடந்த 2021-ல் கனடா நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 160 இடங்களில் வெற்றிபெற்றது. பெரும்பான்மை கிடைக்காததால், புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அரசு நேரடியாகச் சம்மத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், கனடாவுக்குமான ராஜ்ஜியரீதியிலான உறவுகளில் தொய்வு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 2024-ல் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டார் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங். இருப்பினும் ட்ரூடோ அரசுக்கு எதிராக, நாடாளுமன்றக் கீழ் அவையில் கன்சர்வேடிவ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு, ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் இருந்து துணைப் பிரதமர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் ட்ரூடோவுக்கு லிபரல் கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது. வரும் அக்டோபரில் கனடா நாடாளுமன்ற கீழ் அவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த வாரத்தில் லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவார் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு லிபரல் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தெடுக்கப்படும் நபர் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

வரும் புதன்கிழமை நடைபெறும் லிபரல் கட்சி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதேபோல கடந்த 2013-ல் லிபரல் கட்சி நெருக்கடியைச் சந்தித்தபோது, அதன் தலைவராகப் பொறுப்பேற்று 2015 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாகப் பிரதமரானார் ட்ரூடோ.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in