
மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிரான கனடா நாட்டு அமைச்சரின் குற்றச்சாட்டை ஆதாரமற்றது என நிராகரித்துள்ள மத்திய அரசு, அதைக் கண்டித்து கனடா தூதரக பிரதிநிதிக்கு சம்மன் வழங்கியுள்ளது.
கடந்த அக்.29-ல் கனடா நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் டேவிட் மோரிசன் அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு முன்பு வாக்குமூலம் அளித்தார். அதில், கனடாவில் செயல்பட்டுவரும் சீக்கிய பிரிவினைவாதிகள் சிலர் கொல்லப்பட்டதற்கு இந்தியா உள்துறை அமைச்சர் அமித் ஷாவே காரணம் எனக் கூறியுள்ளார்.
கனடா அமைச்சரின் குற்றச்சாட்டை அடுத்து, இந்த விவகாரத்தை முன்வைத்து இன்று (நவ.2) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், `கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று (தில்லி) கனடா தூதரகத்தின் பிரதிநிதியை வரவழைத்தோம்.
கனடா நாடாளுமன்ற குழுவுக்கு முன்பு இந்தியாவின் உள்துறை அமைச்சர் மீது அந்நாட்டு இணையமைச்சர் டேவிட் மோரிசன் கூறிய அடிப்படையற்ற அபத்தமான கருத்துகளுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் குறிப்பு தரப்பட்டது’ என்றார்.
கடந்த வருடம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வைத்து சீக்கிய பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதும், இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என குற்றம்சாட்டினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு எதிராக உள்ள சில முக்கிய ஆதாரங்கள் மற்றும் நுண்ணறிவுத் தகவல்களை, கனடா அரசின் இரு மூத்த அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்துக்கு அளித்ததை சமீபத்தில் ஒப்புக்கொண்டனர்.