கூண்டில் அடைக்கப்பட்ட பிரதமர் மோடி, அமித்ஷா உருவ பொம்மைகள் கனடாவில் அணிவகுப்பு!

கூண்டில் அடைக்கப்பட்ட பிரதமர் மோடி, அமித்ஷா உருவ பொம்மைகள் கனடாவில் அணிவகுப்பு!

இது இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; கனடாவின் மிகக் கொடிய தாக்குதலுக்குப் பெயர் பெற்ற, காலிஸ்தான் பயங்கரவாத குழுவின் அப்பட்டமான ஹிந்து எதிர்ப்பு செயல்.
Published on

காலிஸ்தான் ஆதரவாளர்களால் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட அணிவகுப்பு ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரின் உருவ பொம்மைகள் இடம்பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள மால்டோன் குருத்வாரா முன்னிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்த அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது. கனடாவில் இருக்கும் சுமார் 8,00,000 ஹிந்துக்களை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இந்த அணிவகுப்பில் வைத்து கனடா அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள கனடாவில் உள்ள ஹிந்து சமுதாய மக்களின் தலைவர்களில் ஒருவரான ஷான் பிண்டா,

`இது இந்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. கனடாவின் மிகக் கொடிய தாக்குதலுக்குப் பெயர் பெற்ற, அதேநேரம் திமிர்பிடித்த முறையில் தங்குவதற்கான உரிமையைக் கோரும் காலிஸ்தான் பயங்கரவாதக் குழுவின் அப்பட்டமான ஹிந்து எதிர்ப்பு செயல்’ என்றார்.

கனடாவின் மிகக் கொடிய தாக்குதல் என்று ஷான் பிண்டா குறிப்பிடுவது, 1985-ம் ஆண்டு ஏர் இந்தியாவின் `கனிஷ்கா’ விமானத்தின் மீது குண்டுவீசி காலிஸ்தான் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இந்த தாக்குதலில் 329 பேர் கொல்லப்பட்டனர்.

நடந்து முடிந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்தபிறகு, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமராக இருந்தபோது, காலிஸ்தான் விவகாரத்தை முன்வைத்து கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான அரசுரீதியிலான உறவுகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், ஹிந்துக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட இந்த அணிவகுப்பின் காணொளியைப் பகிர்ந்த கனடா பத்திரிகையாளர் டேனியல் போர்ட்மேன், `காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக செயல்படுவதில் மார்க் கார்னியின் அரசு, ஜஸ்டின் ட்ரூடோ அரசின் அணுகுமுறையிலிருந்து வேறுபடுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

logo
Kizhakku News
kizhakkunews.in