காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலையில் பிரதமர் மோடிக்குத் தொடர்பில்லை: கனடா அரசு
காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை உள்ளிட்ட கனடாவில் நடைபெற்ற குற்றச்செயல்களில், பிரதமர் மோடிக்கோ அல்லது இந்திய அரசு அதிகாரிகளுக்கோ தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை என விளக்கமளித்துள்ளது கனடா அரசு.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டப்படி, காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதாக சமீபத்தில் கனடாவில் வெளியான பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு இந்தத் திட்டம் குறித்துத் தெரியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேநேரம், பிரதமர் மோடிக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க கனடா அரசிடம் போதிய ஆதரங்கள் இல்லை எனவும் அந்த பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பத்திரிக்கையில் வெளியான குற்றச்சாட்டை மறுத்து கனடா பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு,
`கனடாவில் நடைபெற்ற குற்றச் செயல்களில் இந்தியப் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என கனடா அரசு தெரிவிக்கவில்லை, மேலும் அதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இத்தகைய குற்றச்சாட்டுகள் தவறானவை’ என்றார்.
பத்திரிக்கையில் வெளியான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், `பொதுவாக பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளுக்கு நாம் கருத்து தெரிவிப்பது இல்லை. ஆனால் இது போன்ற அவதூறு பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்துள்ள இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன’ என்றார்.
கடந்த ஜூன் 2023-ல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருந்த ஒரு குருத்வாராவுக்கு வெளியே வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இதனை அடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக சில இந்தியர்களைக் கைது செய்தள்ளது அந்நாட்டு காவல்துறை.