
5 நாட்களுக்கும் மேலாக அணையாமல் பரவும் காட்டுத் தீயால், வரலாறு காணாத அளவுக்குப் பேரழிவைச் சந்தித்துள்ளது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்.
அமெரிக்காவில் வறண்ட, குளிர் காலங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் நடைபெறுவது இயல்பான நிகழ்வாகும். ஆனால் கடந்த வாரம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கிய காட்டுத் தீ சம்பவத்தைப் போல இதற்கு முன்பு அந்நாட்டில் எப்போதும் நடைபெற்றதில்லை.
ஜன.7-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கிய காட்டுத் தீ, பலிசேடஸ், கென்னத், லிடியா, ஏட்டன், ஹெர்ஸ்ட் என மொத்தம் ஐந்து பகுதிகளில் தொடர்ந்து எரிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பலிசேடஸ் பகுதியின் 1,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் மட்டும் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
ஹாலிவுட் பிரபலங்களும், கோடீஸ்வர தொழிலதிபர்களும் வசித்து வந்த மாலிபு பகுதி காட்டுத்தீயின் கோரப் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகியுள்ளது. குறிப்பாக மெல் கிப்சன், பாரிஸ் ஹில்டன், ஜேம்ஸ் வுட்ஸ், ஆடம் ப்ரூடி, ஜெஃப் ப்ரிட்ஜெஸ், அந்தோணி ஹாப்கின்ஸ் ஆகியோரின் இல்லங்கள் இருந்த தடம் தெரியாமல் சாம்பலாகியுள்ளன.
இந்த காட்டுத் தீ சம்பவத்தால், இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.