கலிபோர்னியாவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை: ஆளுநர் கவின் நியூஸம் ஒப்புதல் | California | Diwali |

சட்ட மன்றத்தில் இந்திய உறுப்பினர்கள் தாக்கல் செய்த ஏபி268 சட்ட மசோதாவில் கையெழுத்திட்டு ஆளுநர் ஒப்புதல்....
கலிபோர்னியாவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை: ஆளுநர் கவின் நியூஸம் ஒப்புதல் | California | Diwali |
1 min read

கலிபோர்னியாவில் தீபாவளி பண்டிகையை அரசு விடுமுறையாக அறிவிக்கும் சட்ட சமோதாவுக்கு ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதல் அளித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் இந்தியர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளைப் பகிர்ந்து தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி வரும் அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படவுள்ளது.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்களும் தீபாவளியை அந்தந்த நாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப கொண்டாடி வருகின்றார்கள். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை இந்தியர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனெக்டிகட் மாகாணங்கள் ஏற்கெனவே தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளன.

இந்தப் பட்டியலில் கலிபோர்னியா மாகாணமும் இணைந்துள்ளது. அமெரிக்காவின் மிக்கப்பெரிய மக்கள் தொகை கொண்ட மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. இந்த மாகாணத்தில் தீபாவளி அரசு விடுமுறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்த ஏபி268 சட்ட மசோதா கலிபோர்னியா மாகாண சட்டப்பேரவையின் இந்திய உறுப்பினர்களான தர்ஷனா படேல் மற்றும் அஷ் கல்ரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டு முதல் கலிபோர்னியாவிலும் தீபாவளி அரசு விடுமுறையாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து வட அமெரிக்கா வாழ் இந்துக்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் தீபாவளியை மாகாணத்தின் அரசு விடுமுறையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவான ஏபி268-க்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தீபாவளியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கலிபோர்னியா வாழ் இந்துக்களை ஒன்றிணைக்கும் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஆளுநர் கவின் நியூஸமிற்கு நன்றி. இதைச் சாத்தியமாக்கிய கலிபோர்னியா சட்டமன்றத்தின் இந்திய உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் அஷ் கல்ரா ஆகிய இருவருக்கும் நன்றி.

இந்தப் புதிய சட்டம் மூலம் கலிபோர்னியாவின் சமூக பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்படும். அதனால் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் தீபாவளி உரிய சடங்குகளுடன் கொண்டாட நேரம் கிடைக்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in