“உஸ்மான் ஹாடியை கொன்றது அரசுதான்’’: சகோதரர் ஒமர் ஹாடி குற்றச்சாட்டு | Bangladesh |

எந்த அமைப்புக்கும், எஜமானர்களுக்கும் பணியாமல் இருந்ததால்தான் ஹாடி கொல்லப்பட்டார்...
“உஸ்மான் ஹாடியை கொன்றது அரசுதான்’’: சகோதரர் ஒமர் ஹாடி குற்றச்சாட்டு
“உஸ்மான் ஹாடியை கொன்றது அரசுதான்’’: சகோதரர் ஒமர் ஹாடி குற்றச்சாட்டு
2 min read

உஸ்மான் ஹாடியைக் கொண்டு அதைக் காரணமாக வைத்து தேர்தலை நிறுத்த நினைப்பதாக வங்கதேச இடைக்கால அரசின் மீது உஸ்மான் ஹாடியின் சகோதரர் ஓமர் ஹாடி குற்றம்சாட்டியுள்ளார்.

வங்​கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவ அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அதற்குப் பிறகு பொறுப்பேற்ற நோபல் பரிசு பெற்ற முகமது யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது.

ஷேக் ஹசீனாவின் நிலை என்ன?

இடைக்கால அரசு ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தது. அதில் மாணவர் போராட்டத்தின்போது மனிதாபிமானத்திற்கு எதிராக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்ட விவகாரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்காக அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இந்தியாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் இண்டர்போல் துறையின் உதவியையும் நாடியிருக்கிறது.

ஷெரீஃப் உஸ்மான் ஹாடி கொலை

இதற்கிடையில், மாணவர் போராட்டத்தில் அமைப்பை வழிநடத்திய சமூக செயற்பாட்டாளர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி, கடந்த டிசம்பர் 12 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த டிசம்பர் 18 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த மாணவ அமைப்பினர் வங்கதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தின் பிரபல நாளிதழ்களின் அலுவலகங்களில் தீ வைக்கப்பட்டன. இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. ஹிந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.

இடைக்கால அரசு மீது குற்றச்சாட்டு

இந்நிலையில், டாக்காவின் ஷாபாக் பகுதியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் முன் இன்கிலாப் மன்ச் அமைப்பால் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் ஷெரீஃப் ஓமர் ஹாடி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

“தேர்தல் அறிவித்த சில நாள்களுக்குள்ளேயே ஹாடி கொல்லப்பட்டுள்ளார். இதற்கான பொறுப்பிலிருந்து அதிகாரத்தில் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது. உஸ்மான் ஹாடியை நீங்கள்தான் கொன்றீர்கள். இப்போது அதையே ஒரு பிரச்னையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள். எந்த அமைப்புக்கும், எஜமானர்களுக்கும் பணியாமல் இருந்ததால்தான் ஹாடி கொல்லப்பட்டார்.

“தேர்தல் நடக்க வேண்டும்”

பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடக்க வேண்டும் என்று உஸ்மான் ஹாடி விரும்பினார். அதற்கான அடிமட்ட நிலையிலிருந்து வேலை செய்துள்ளார். அதனாலேயே தேர்தல் எந்த வகையிலும் பாதிப்பின்றி நடைபெற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, கொலையாளிகளுக்கு விரைவாகத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்யுங்கள். அரசாங்கம் இந்த விவகாரத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காட்டத் தவறிவிட்டது. உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் வங்கதேசத்தில் இருந்து தப்பி ஓட நேரிடும்” என்றார்.

Summary

The brother of slain youth leader Sharif Osman Hadi accused Bangladesh’s interim government, of orchestrating the killing to destabilize the country and derail the upcoming national election in February.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in