

பிரிட்டன் மன்னர் சார்லஸின் சகோதரரும் முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் எப்ஸ்டீன் கோப்புகளின் அடிப்படையில் அதிகார முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியாக ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ல் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவருடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த காணோலிகள், படங்கள் ஆகியவை அமெரிக்காவின் நீதித்துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்டு, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எப்ஸ்டீன் கோப்புகளில் முன்னாள் இளவரசர்
இந்தக் கோப்புகளில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், தற்போதைய பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்டசரின் பெயரும் பலமுறை இடம்பெற்றுள்ளது சர்ச்சைக்குள்ளானது. அதன் அடிப்படையில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக 2001 - 2011 வரையிலான காலகட்டத்தில் பிரட்டனின் வர்த்தகத் தூதராக ஆண்ட்ரூ இருந்தபோது அரசு ரீதியான ரகசியத் தகவல்களை அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பிறந்தநாளில் கைதான ஆண்ட்ரூ
இதற்கிடையில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் வசிக்கும் விண்ட்சர் இல்லத்திலிருந்து வெளியேறி, நார்ஃபோல்க் பகுதியில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் வசித்து வந்த ஆண்ட்ரூ, இன்று தனது 66-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அவரது இல்லத்திற்கு வருகை தந்த காவலர்கள் அவரைக் கைது செய்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேம்ஸ் வேலி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நார்ஃபோல்க் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அரசு அலுவலகத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பெர்க்ஷயர் மற்றும் நார்ஃபோல்க் ஆகிய பகுதிகளில் உள்ள முகவரிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதானவர் பெயர் வெளியிடப்படவில்லை
இது தொடர்பாக காவல்துறை உதவி ஆணையர் ஆலிவர் ரைட் இது குறித்துக் கூறியதாவது: "அரசு அலுவலக முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இந்த விசாரணையின் நேர்மையைப் பாதுகாப்பது மிக முக்கியமானது. தற்போது அந்த நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார்," என்று தெரிவித்தார். தேசிய வழிகாட்டுதல்களின்படி கைதானவரின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் அது இளவரசர் ஆண்ட்ரூதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
அரச குடும்பத்தில் பரபரப்பு
முன்னதாக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால் உருவான அழுத்தம் காரணமாக அவரது இளவரசர் பட்டத்தை மன்னர் சார்லஸ் நீக்கி கடந்த ஆண்டு நவம்பர் 6 அன்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது அதிகார துஷ்பிரயோக வழக்கு பாய்ந்துள்ளது பிரிட்டன் அரச குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினர் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Britain’s ex-Prince Andrew Mountbatten-Windsor has been arrested on suspicion of misconduct in public office, the BBC reported, marking the first time the Duke of York has been detained in connection with allegations linked to his public role, amid constant scrutiny over his links with convicted sex offender Jeffrey Epstein.