
இந்தியா உள்பட பிரிக்ஸ் அமைப்பின் 10 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட வருடாந்திர மாநாடு பிரேசில் நாட்டின் தலைநகரமான பிரேசிலியாவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவின் உயர்மட்ட நாடாளுமன்ற குழுவிற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்றிருந்தார்.
மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற பிரிதிநிதிகளும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்திருந்தன. பயங்கரவாதத்திற்கு எதிராக முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற வகையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் அதில் உறுதிபூண்டிருந்தன.
இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, இந்தொனேசியா ஆகிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகிய பல்வேறு முக்கிய தலைப்புகளில் கீழ் விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு தலைப்பிலும் இந்திய தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் பிற நாடுகளிடம் இருந்து வெகுவான வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக, பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பிய இந்தியாவின் நிலைப்பாட்டை பிற நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொண்டன. இதன் அடிப்படையில், பயங்கரவாதத்திற்கு எதிராக முற்றிலும் சகிப்புத்தன்மையற்ற வகையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன.
மாநாட்டின் முடிவில் அடுத்த பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் அமைப்பின் கூட்டம், இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த அமைப்பின் புதிய தலைவராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.