போயிங் விமானங்களில் தயாரிப்புக் குறைபாடு: போயிங் முன்னாள் பொறியாளர் சாம் சலேபோர்

குறைபாடுகளுடன் கூடிய தயாரிப்பால் ஆயிரக்கணக்கான பயணங்களுக்குப் பிறகு விமானத்தின் நடுப்பாகம் உடைந்துபோகக்கூடும்.
போயிங் விமானம் - கோப்புப்படம்
போயிங் விமானம் - கோப்புப்படம்ANI
1 min read

லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் அஹமதாபாத்தில் நேற்று (ஜூன் 12) விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், இந்த ரக விமானங்களில் உள்ள தயாரிப்பு குறைபாடுகள் குறித்து போயிங் நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பொறியாளரான சாம் சலேபோர் கடந்த 2024-ல் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

விமானத்தின் அசெம்பிளி பணிகளின்போது பாகங்களை முறையற்ற வகையில் இணைப்பது விமானத்தின் நீண்ட ஆயுளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் கூறினார். மேலும், குறைபாடுகளுடன் கூடிய தயாரிப்பால் ஆயிரக்கணக்கான பயணங்களுக்குப் பிறகு விமானத்தின் நடுப்பாகம் உடைந்துபோகக்கூடும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.

தி நியூயார்க் டைம்ஸ் உடனான அவரது விரிவான நேர்காணல்கள் மற்றும் அமெரிக்க அரசின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பிடம் முறையாக அளிக்கப்பட்ட புகாருக்குப் பிறகு, போயிங் 787 விமான உற்பத்தியின் செயல்முறைகள் குறித்த விசாரணை நடைபெற்றது.

போயிங் விமானங்களின் தயாரிப்புப் பணிகளின்போது பொருந்தாத பாகங்களை இணைக்கும் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தும், சில நேரங்களில் பொருந்தாத விமான பாகங்கள் மீது ஊழியர்கள் ஏறிக் குதித்து இணைப்புப் பணிகளை மேற்கொண்டது குறித்தும் 2024-ல் சலேபோர் குற்றம்சாட்டினார்.

`விமானத்தின் பாகங்களை இணைக்க ஆட்கள் அவற்றின் மீது குதிப்பதை நான் உண்மையில் பார்த்தேன். துளைகள் தற்காலிகமாக இணைப்பதற்காக மேலும் கீழும் குதிப்பதன் மூலம், பாகங்கள் சிதைக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு விமானத்தை உருவாக்கும் முறை இதுவல்ல’ என்று சலேபோர் அளித்த பேட்டியை சிஎன்என் மேற்கோள்காட்டியுள்ளது.

சலேபோர் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகள் போயிங் 777 ரக ஜெட் விமானங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in