17 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தாரிக் ரஹ்மான்: வங்கதேசத்து இளவரசரா இவர்? | Tarique Rahman |

வங்கதேச பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
BNP Acting Chairman Tarique Rahman lands in Bangladesh after 17 years in exile
தாரிக் ரஹ்மான் (கோப்புப்படம்)
2 min read

வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான். இவர் முன்னாள் பிரதமர் காலேடா ஸியாவின் மகன். கடந்த 17 ஆண்டுகளாக இவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தாரிக் ரஹ்மான் (60) வங்கதேசம் திரும்பியுள்ளார். வங்கதேசத்தில் இவருடைய வருகைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தாரிக் ரஹ்மான் தனது மனைவி ஸுபைடா ரஹ்மான், மகள் ஸைமா ரஹ்மான் ஆகியோருடன் வங்கதேசம் வந்துள்ளார். இவர்களுடன் வளர்ப்புப் பூனையான ஸூபுவும் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரு உதவியாளர்கள் உடன் வந்துள்ளார்கள்.

டாகா வந்து இறங்கிய தாரிக் ரஹ்மானுக்கு வங்கதேச தேசியவாத கட்சியின் நிலைக் குழு உறுப்பினர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்கள். தாரிக் ரஹ்மானுக்கென்று பிரத்யேகமாக குண்டுகளால் துளைக்க முடியாத இரு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு வாகனத்தில் தான் தாரிக் ரஹ்மான் பயணித்தார். புர்பாசலில் 300 அடி சாலைப் பகுதியில் தாரிக் ரஹ்மானுக்கு இரு புறமும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களும் இருந்தார்கள். தாரிக் ரஹ்மானும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாகனத்திலிருந்தபடி, கைகளை அசைத்தபடி பயணித்தார்.

தாரிக் ரஹ்மான் நாட்டு மக்களிடையே உரையாற்றவிருக்கிறார். இதை முடித்துக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயார் ஸியாவை மருத்துவமனையில் சந்திக்கவுள்ளார்.

வங்கதேசத்தில் பிப்ரவரி மாதம் பிரதமர் பதவிக்கானப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது. பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என கணிப்புகள் வெளியாகி வரும் சூழலில் தான் இவர் வங்கதேசம் திரும்பியுள்ளார். தேர்தல் போட்டியில் இஸ்லாமிய ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியும் இருக்கிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2008 முதல் 2025 வரை என்ன செய்துகொண்டிருந்தார் தாரிக் ரஹ்மான்?

உள்நாட்டில் தாரிக் ரஹ்மான் மீது பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகள் இருந்தன. பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். ஷேக் ஹசீனாவைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகக் குற்றச்சாட்டு இருந்தது.

செப்டம்பர் 2008-ல் வங்கதேசத்திலிருந்து வெளியேறி லண்டன் சென்றார். டிசம்பர் 2009-ல் கட்சியின் மூத்த துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்தபடியே கட்சியை வழிநடத்தி வந்தார் தாரிக் ரஹ்மான்.

2024-ல் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, இவர் மீதான வழக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டன. முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் சீர்திருத்தங்களை ஆதரித்தார். தற்போது வங்கதேசம் திரும்பியிருக்கிறார்.

Summary

After spending 17 years in exile, the Bangladesh Nationalist Party Acting Chairman, Tarique Rahman, returns to Dhaka on Thursday, in what is expected to be a major political event in the country's history after the ousting of the former Prime Minister Sheikh Hasina last year during the July Uprising.

Tarique Rahman | Bangladesh | Bangaldesh Nationalist Party | Dhaka |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in