
குழந்தை திருமணங்களுக்கு வழிவகை செய்யும் மசோதா, கடந்த ஜன.21-ல் ஈராக் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதற்கு அந்நாட்டைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈராக் நாட்டில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை ஆகியவற்றை நிர்வகிக்கும் வகையில் கடந்த 1959-ல் தனிநபர் சட்டம் இயற்றப்பட்டது. ஒருங்கிணைந்த குடும்ப சட்டமாக இயற்றப்பட்ட இந்த தனிநபர் சட்டத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஈராக் நாடாளுமன்றத்தில் கடந்த ஜன.21-ல் மூன்று சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் ஒரு மசோதா அந்நாட்டு இஸ்லாமிய மத நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வழிவகை செய்கிறது. ஈராக்கில் ஷியா இஸ்லாமியம் பெரும்பான்மை மதமாக உள்ளது.
அந்நாட்டு இஸ்லாமிய மத குருமார்கள் ஜாஃபரி வழி இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றி வருகிறார்கள். சட்ட மசோதாக்கள் மூலம் இஸ்லாமிய மத நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதால், இனி 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதைச் சேர்ந்த சிறுமிகளின் திருமணத்திற்கு இஸ்லாமிய மத சட்டங்களின்படி அங்கீகாரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சட்டப்படி ஈரான் நாட்டில் திருமணம் மேற்கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாக அமலில் உள்ள நடைமுறையை கருத்தில்கொள்ளாமல், பழமைவாத இஸ்லாமிய மத குருமார்கள் குழந்தை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவார்கள் என அந்நாட்டுப் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கிய பெண்கள் லீக்கின் உறுப்பினரும், அந்நாட்டு மனித உரிமை செயல்பாட்டாளருமான இன்திசார் அல்-மயாலி, `இந்த சட்ட மசோதாவால், குழந்தை திருமணங்கள் அதிகளவில் ஏற்பட்டு, அதனால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்’ என்றார்.