எப்ஸ்டீனுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன்: பில் கேட்ஸ் | Epstein Files | Bill Gates |

தனக்கு எந்த மின்னஞ்சலும் வரவில்லை. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அதை அனுப்பவே இல்லை...
பில் கேட்ஸ் (கோப்புப்படம்)
பில் கேட்ஸ் (கோப்புப்படம்)
1 min read

எப்ஸ்டீனுடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துவதாக மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற நபர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, கடந்த 2019-ல் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து அவருக்குத் தொடர்புள்ள மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்றன.

வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்

இதற்கிடையில் அமெரிக்காவில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்காவின் நீதித்துறை கடந்த ஜனவரி 19 முதல் பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. எப்ஸ்டீன் கோப்புகள் இணையத்தில் வெளியான நிலையில், அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளின்டன், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட பலரது படங்கள் வெளியாகி வருகின்றன. மேலும், முக்கிய பிரமுகர்கள் பலரது மின்னஞ்சல்கள் அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

பில் கேட்ஸ் வருத்தம்

உலக அளவில் இந்தக் கோப்புகள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் தன்னைப் பற்றி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து பில் கேட்ஸ் பேசியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனை அறிந்திருந்த காரணத்திற்காகவே தான் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். அவருடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் தான் வருந்துவதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.

எந்த மின்னஞ்சலும் வரவில்லை

தனக்கு இருந்த பாலியல் தொடர்பான நோயைத் தன் மனைவி மெலிண்டா கேட்ஸிடமிருந்து பில் கேட்ஸ் மறைத்ததாக ஜெஃப்ரி கோப்புகளில் கிடைத்துள்ள மின்னஞ்சலையும் பில் கேட்ஸ் மறுத்துள்ளார். அப்படித் தனக்கு எந்த மின்னஞ்சலும் வரவில்லை. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அதை அனுப்பவே இல்லை. அது தன்னை மிரட்டுவதற்காக எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பலமுறை உணவு உண்டிருப்பதை ஒப்புக் கொண்டுள்ள பில் கேட்ஸ், உலக சுகாதாரம் தொடர்பான திட்டங்களுக்கு பணம் திரட்டுவது குறித்து மட்டுமே இருவரும் உரையாடியதாகவும், பாலியல் ரீதியாக எதுவும் பேசியதில்லை என்றும் கூறியுள்ளார்.

மெலிண்டா கேட்ஸின் கருத்து

முன்னதாக பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ், பிரிந்த தங்கள் திருமண வாழ்க்கையின் வலி மிகுந்த நினைவுகளை எப்ஸ்டீன் கோப்புகள் உருவாக்குகின்றன, கோப்புகளில் இருக்கும் கேள்விகள் தனது முன்னாள் கணவரைப் பற்றியது என்பதால் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்றும் மெலிண்டா கேட்ஸ் பேசியிருந்தார். இப்போது உலகின் கவனம் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களின் மீது இருக்க வேண்டும். உலகில் எந்தப் பெண்ணுக்கும் அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்றும் மெலிண்டா கேட்ஸ் கூறியுள்ளார்.

Summary

Microsoft co-founder Bill Gates has said he regrets every minute he spent with Epstein.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in