கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோம்: பாக். முன்னாள் அமைச்சரும் ஒப்புதல்

"அதிலிருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம். இந்தப் பிரச்னையைச் சரி செய்வதற்காக சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்."
Published on

பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் கடந்த கால வரலாறு என்பது ரகசியமல்ல என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கடந்த வாரம் 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்படத் தொடங்கியது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், "பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து பயிற்சியளித்து நிதியுதவி அளிக்கும் நீண்ட வரலாறை பாகிஸ்தான் கொண்டிருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா" என்று கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "அமெரிக்காவுக்காகவும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காகவும் இந்த மோசமான செயலைக் கடந்த 30 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம்" என்றார்.

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தற்போது ஸ்கை நியூஸுக்கு பேட்டியளித்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பதில் குறித்து இவரிடம் கேட்கப்பட்டது. இவரும் கடந்த காலங்களில் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

"பாதுகாப்பு அமைச்சர் கூறியதைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் கடந்த காலங்கள் ஒன்றும் ரகசியம் அல்ல. இதன் விளைவுகளை நாங்கள் அனுபவித்துள்ளோம், பாகிஸ்தான் அனுபவித்துள்ளது. அடுத்தடுத்து பிரிவினைவாதத்தை எதிர்கொண்டு வந்துள்ளோம். ஆனால், நாங்கள் அனுபவித்ததன் விளைவாக, அதிலிருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம். இந்தப் பிரச்னையைச் சரி செய்வதற்காக சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

பாகிஸ்தானின் வரலாற்றைப் பொறுத்தவரை, அது வரலாறு. நிகழ்காலத்தில் எங்களுடையப் பங்கு என்று எதுவும் இல்லை. எங்களுடைய வரலாற்றில் அது துரதிருஷ்டவசமான ஒரு பகுதி" என்றார் பிலாவல் பூட்டோ.

logo
Kizhakku News
kizhakkunews.in