அமெரிக்கப் பாலம் விபத்து: 60 மில்லியன் டாலர் நிதியுதவிக்கு பைடன் நிர்வாகம் ஒப்புதல்

கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூண்கள்மீது சிங்கப்பூர் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் சரிந்து இடிந்து விழுந்தது.
அமெரிக்கப் பாலம் விபத்து: 60 மில்லியன் டாலர் நிதியுதவிக்கு பைடன் நிர்வாகம் ஒப்புதல்

மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிக்கான 60 மில்லியன் டாலர் அவசர நிதியுதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அல் ஜஸீரா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூண்கள்மீது சிங்கப்பூர் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் சரிந்து இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன சிலரைத் தேடும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக மேரிலாந்து போக்குவரத்துத் துறையின் கோரிக்கையைப் பெற்ற சில மணிநேரங்களில் இடிந்து விழுந்த பாலத்தை மீண்டும் கட்டுவதற்காக நிதி வழங்க பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக பெடரல் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

சரக்குக் கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலர் பீட்டே பட்டிகிக் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேரிலாந்து ஆளுநர் வெஸ் மூர், பாலம் சீரமைக்கப்பட்டு கட்டிமுடிக்கப்படும். புதிதாக பாலம் கட்டுவது என்பது ஒரு சில நாட்களில்  அல்லது ஒரு சில வாரங்களில் முடியும் பணி அல்ல. அதற்கு நீண்ட காலமாகும். எனினும் பாலம் முழுமையாக சீரமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது சரக்குக் கப்பல் மோதியதால் பாலத்தின் இரும்புத் தூண்கள் மற்றும் இரும்பு கர்டர்கள் 4000 டன் எடை கொண்டவை கப்பலின் மேற்பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளன. அவற்றை அகற்றுவது குறித்து நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதன் பிறகுதான் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்க முடியும். நீச்சல் வீர்ர்கள் இதுவரை இரண்டு தொழிலாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்தப் பாலத்தை முழுமையாக சீரமைக்க 2 பில்லியின் டாலர் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அவசர உதவியாக பைடன் நிர்வாகம் 60 மில்லியன் டாலர் செலவிட ஒப்புதல் அளித்துள்ளது.

பாலம் திடீரென சரிந்து விழுந்ததால் அதில் சென்று கொண்டிருந்த சிலரும், பழுதுபார்ப்பு பணியில் இருந்த தொழிலாளர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களைத் தேடி கண்டுபிடிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும். தற்போதைய நிலையில் மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க முடியாது. இதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்றார் வெஸ்மூர்.

இந்த விவகாரம் மேரிலாந்து பற்றியது அல்ல. நாட்டின் பொருளாதாரம் பற்றியது. இந்தப் பாலத்தை ஒட்டியுள்ள துறைமுகத்திலிருந்துதான் கார்கள், வேளாண் கருவிகள் கையாளப்படுகின்றன. இங்கு 8000-த்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். பாலம் இடிந்து விழுந்த விபத்தால் துறைமுகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பால்டிமோர் துறைமுகப் பகுதியில் கப்பல் போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த விபத்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

துறைமுகம் மூடப்பட்டதால் இந்தியா, சீனா, கனடா மற்றும் நெதர்லாந்த்துக்கான நிலக்கரி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து நியூயார்க், நியூஜெர்ஸி, வெர்ஜீனியா வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படும் இந்த சரக்குக் கப்பல் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானபோது அதில் 2 மாலுமிகள் மற்றும் 21 கப்பல் தொழிலாளர்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in