

வங்கதேசத்தில் மாணவ இயக்கத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி மரணத்தைத் தொடர்ந்து மாணவ அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் இறங்கியதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வங்கதேச தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு மாணவ அமைப்பினர் மிகப்பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர். இதைக் கட்டுக்குள் கொண்டு வர ஷேக் ஹசீனா துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார். தற்போது இந்தியாவில் உள்ள அவருக்கு எதிராக அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதற்கிடையில், மாணவ அமைப்பினரின் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, கடந்த டிசம்பர் 12 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் தலையில் காயமடைந்த ஹாடிக்கு வங்கதேசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 6 நாள்கள் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று (டிச. 18) மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனால் கிளர்ந்து எழுந்த மாணவ அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக அந்நாட்டின் பிரபல பத்திரிகைகளான புரோதோம் அலோ மற்றும் டெய்லி ஸ்டார் ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு நேற்று மாலை தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டுத் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து நேற்றிரவு 11 மணியளவில் சட்டோகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். கண்ணீர் புகைக்குண்டு வீசி அவர்களை கலைக்க முயற்சித்த நிலையில், தூதரக அலுவலகத்தின் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, இந்திய துணைத் தூதரின் வீட்டின் மீதும் சிலர் கல்வீசித் தாக்கியதுடன், இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், வங்கதேசத்தில் உள்ள அவாமி லீக்கிற்கு சொந்தமான இடங்களை போராட்டக்காரர்கள் தாக்கி வருகின்றனர். இதனால், வங்கதேசத்தில் வாழ் இந்தியர்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், வங்கதேச அரசின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த ஷெரீஃப் உஸ்மான் ஹாடி இனி நம்முடன் இல்லை. சில நிமிடங்களுக்கு முன்பு, சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இதயத்தை உடைக்கும் இந்தச் செய்தியை தெரிவித்தார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் இந்த அழியாத வீரரை உலகங்களின் எல்லாம் வல்ல இறைவன் ஒரு தியாகியாக ஏற்றுக்கொள்ள பிரார்த்திக்கிறேன். அவரது மறைவு நாட்டின் அரசியல் மற்றும் ஜனநாயக நிலப்பரப்பில் ஈடுசெய்ய முடியாதது. தியாகி ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் மரணத்தை முன்னிட்டு, வரும் சனிக்கிழமை ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கிறேன். சனிக்கிழமை அன்று அனைத்து அரசு, தன்னாட்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேச தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். இந்தப் படுகொலையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் விரைவாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக மிக உயர்ந்த தண்டனைகள் உறுதி செய்யப்படும். இந்த விஷயத்தில் எந்த தயக்கமும் காட்டப்படாது”
Bangladesh witnessed widespread unrest overnight on Thursday after the death of Sharif Osman Hadi, a prominent youth leader and vocal critic of ousted former Prime Minister Sheikh Hasina, triggering violent protests in parts of Dhaka and attacks on major media houses.