வங்கதேச வன்முறை: 30% இடஒதுக்கீடு முறையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

அரசுப் பணிகளில் 93% தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச வன்முறை: 30% இடஒதுக்கீடு முறையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
1 min read

வங்கதேசத்தில் வன்முறைக்குக் காரணமான 30 சதவீத இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்டத்துக்காகப் போராடியவர்களின் வழித்தோன்றலுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் முறை 2018 வரை நடைமுறையில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை வங்கதேச அரசு 2018-ல் ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீடு முறைக்கு விதிக்கப்பட்ட தடையை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில் நீக்கியது. இந்த இடஒதுக்கீடு முறைக்கு எதிராக அந்த நாடு முழுக்க மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வங்கதேசம் 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரப் போராட்டத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியே முன்னிலை வகித்தது. எனவே, இந்த இடஒதுக்கீடு முறையால் அவாமி லீக் கட்சியினரே பெரும்பாலும் பயன்பெறுவார்கள் என்பதால், தகுதியின் அடிப்படையிலான முறை பின்பற்றப்பட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

வங்கதேசத்தில் மொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 47 மாவட்டங்கள் வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளார்கள், 1,500 பேர் காயமடைந்துள்ளார்கள். வன்முறையைத் தொடர்ந்து, அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அரசுமுறைப் பயணத்தை ரத்து செய்துள்ளார். வங்கதேசம் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. கண்டதும் சுடுவதற்கான உத்தரவும் நேற்று பிறப்பிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன.

இந்த நிலையில், 30% இடஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வழித்தோன்றலுக்கு அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்தும் இடஒதுக்கீட்டு முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அரசுப் பணிகளில் 93% தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். மீதமுள்ள 7% அரசுப் பணிகள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வழித்தோன்றலுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம், அங்கு மீண்டும் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in