
வங்கதேசத்தில் அமையவுள்ள இடைக்கால அரசுக்கு நோபர் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையேற்க வேண்டும் மாணவர்கள் போராட்டக் குழு முன்மொழிந்துள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடித்ததையடுத்து, திங்கள்கிழமை மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் போராட்டத்தில் வலுப்பெற்றது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நேற்று அங்கிருந்து தப்பி இந்தியா வந்தடைந்தார். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டதாகவும், விரைவில் இடைக்கால அரசை அமைக்கப்படவுள்ளதாகவும் ராணுவத் தளபதி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இதனிடையே, இடைக்கால அரசு அமைவதற்கு அந்த நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதின் நேற்றிரவு ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநர் முகமது யூனுஸ் தலைமையேற்க வேண்டும் என மாணவர்கள் போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாணவர்கள் போராட்டக் குழுவின் முக்கியத் தலைவர்களான நஹித் இஸ்லாம், ஆசிஃப் மஹமூத் மற்றும் அபு பகர் மஸும்தார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்ட காணொளியில் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்கள். மேலும், "வேறு எந்தவொரு அரசையும் ஏற்றுக்கொள்ள முடியாது, நாம் முன்வைக்கப்படும் இடைக்கால அரசு அமையும் வரை, மாணவர்கள் யாரும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது" என்றும் தெரிவித்துள்ளார்கள்.
யார் இந்த முகமது யூனுஸ்:
முகமது யூனுஸ் 1940-ல் சிட்டகாங்கில் பிறந்தார். தாகா பல்கலைக்கழகத்தல் படித்த இவர், பொருளாதாரப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். இங்கு பிஹெச்டி முடித்த இவர், மிடில் டென்னீஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசரியராகப் பணிபுரிந்தார். இதன்பிறகு, முகமது யூனுஸ் வங்கதேசம் திரும்பினார்.
லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டதற்காக முகமது யூனுஸுக்கு 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கிராமீன் வங்கி மூலம் வங்கதேசத்தில் கிராமப்புற ஏழைகளுக்கு கடன் கொடுத்தார். இதன்மூலம், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டது.
ஆனால், 2011-ல் பிறகு கிராமீன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து ஷேக் ஹசீனாவால் முகமது யூனுஸ் நீக்கப்பட்டார். இவருக்கு எதிராக 190-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அண்மையில் வங்கதேசத்தின் தொழிலாளர் சட்டங்களை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முகமது யூனுஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.