
வங்கதேச ராணுவத் தளபதி விடுத்த கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு, மியான்மரின் ராக்ஹீன் மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியா மக்களுக்கு உதவிடும் வகையிலான `மனிதாபிமான வழித்தடம்’ விவகாரத்தில், முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரின் ராக்ஹீன் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின ரோஹிங்கியா மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, வங்கதேசத்தின் சட்டோகிராம் கோட்டத்தில் இருந்து, மனிதநேய வழித்தடம் அமைப்பதற்கான முன்னெடுப்பை, ஐநா சபை அறிவுறுத்தலின்பேரில் வங்கதேச இடைக்கால அரசு தொடங்கியது.
இந்த வழித்தடம் வங்கதேசத்தின் இறையாண்மைக்கு இடையூறாக இருக்கும் என்றும், புவிசார் ஆதாயங்களுக்காக அமெரிக்காவால் இது திணிக்கப்படுகிறது என்றும் வங்கதேசத்தில் கண்டங்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, வங்கதேசத்தின் ராணுவத் தளபதி வக்கேர்-உஸ்-ஸமானின் இதை `இரத்தக்களரி வழித்தடம்’ என்று விமர்சித்தார்.
`நாட்டின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் வங்கதேச இராணுவம் ஒருபோதும் ஈடுபடாது. அவ்வாறு நடந்துகொள்ளவும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். எந்தவொரு செயலிலும் தேசத்தின் நலனே முதன்மையாக இருக்கவேண்டும். எதைச் செய்தாலும் அரசியல் ஒருமித்த கருத்து இருக்கவேண்டும்’ என்று யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு ராணுவத் தளபதி நேற்று (மே 21) மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக டாக்கா டிரிப்யூன் செய்தி வெளியிட்டது.
இந்த வழித்தடத்திற்கு எதிராக எழுந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், இடைக்கால அரசாங்கம் இதை செயல்படுத்துவதற்கான பணியில் இறங்கியதற்கான பிரதான காரணமாக அமெரிக்கா கைகாட்டப்பட்டது. சீனாவை எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் அதிகார விளையாட்டின் ஒரு பகுதியாக இந்த வழித்தடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், ராணுவத் தளபதியின் எச்சரிக்கைக்குப் பிறகு இந்த வழித்தடம் தொடர்பாக யாரிடமும் இடைக்கால அரசு கலந்தாலோசிக்கவில்லை என்றும், வருங்காலத்திலும் அவ்வாறு நடைபெறாது என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலீலுர் ரஹ்மான் கூறியுள்ளார்.