
கடந்தாண்டு ஆகஸ்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும், நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை நீக்கி, அந்நாட்டு இடைக்கால அரசு புதிய கரன்சி நோட்டுகளை நேற்று (ஜூன் 1) வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன.
`கரன்சி நோட்டுகளின் புதிய தொடர் மற்றும் வடிவமைப்பின் கீழ், கரன்சி நோட்டுகளில் எந்த மனித உருவப்படங்களும் இடம்பெறாது. மாறாக இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் (அவற்றில்) காண்பிக்கப்படும்’ என்று வங்கதேச வங்கியின் செய்தித்தொடர்பாளர் ஆரிஃப் ஹொசைன் கானா தெரிவித்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரன்சி நோட்டுகளில் இடம்பெறவுள்ள புதிய வடிவமைப்புகளில், பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது வங்காள பஞ்சத்தை சித்தரிக்கும் மறைந்த ஓவியர் ஜெய்னுல் அபிதீனின் ஓவியங்கள், ஹிந்து, பௌத்த ஆலயங்கள் மற்றும் சில வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் படங்கள் போன்றவை அடங்கும். சில கரன்சி நோட்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் உயிர் நீத்தவர்களுக்கான தேசிய தியாகிகளின் நினைவுச்சின்னமும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
இதுநாள் வரையில், வங்கதேத்தில் புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுகளில் ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானின் படம் இடம்பெற்றிருந்தது. 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதில் முக்கியப் பங்காற்றிய அவர், 1975-ல் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டார்.
புதிதாக வெளியிட திட்டமிடப்பட்ட 9 கரன்சி நோட்டுகளில், 3 கரன்சி நோட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன. மேலும், புதிய கரன்சி நோட்டுகளுடன், பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.