வங்கதேச வன்முறை: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு | Sheikh Hasina |

போராட்டக்காரர்களைக் கொலை செய்ய ஷேக் ஹசீனா ஆணையிட்டார்...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (கோப்புப்படம்)
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (கோப்புப்படம்)
1 min read

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024 ஜூலை இறுதியில் வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக எழுந்த போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தார்கள். இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனால் அந்நாட்டில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உருவானது.

புதிதாக அமைந்த அரசு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உட்பட ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்தது. அவை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இதற்கிடையில், மக்கள் போராட்டத்தின் போது ஷேக் ஹசீனா வன்முறையைத் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது.

அதன் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதை முகமது யுனுஸின் சதி என்று விமர்சித்த ஷேக் ஹசீனா, வெளியாகும் தீர்ப்பு குறித்து தனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை என்று கருத்து சொல்லியிருந்தார்.

இந்நிலையில், ஷேக் ஹசீனா மனித குலத்திற்கு எதிராக குற்றம் செய்த குற்றவாளி என்று அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்தது. அதனடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இவ்வழக்கு குறித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாய நீதிபதி கூறியதாவது:

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ஷேக் ஹசீனா செய்துள்ளார். அவரது ஆட்சியில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அவர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அவரது ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைக் கொலை செய்ய ஹெலிகாப்டர் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தவும் ஆணையிட்டிருக்கிறார். படுகாயமடைந்த போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு ஜூலை - ஆகஸ்ட்டில் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 24,000 பேர் காயம் அடைந்தார்கள்.” என்றார்.

Summary

Bangladesh International Crimes Tribunal announced death sentence to former Prime Minister Sheikh Hasina after finding her guilty, alleging that she ordered the killing of people during 2024 Bangladesh protest.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in