வங்கதேசத்தில் புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசு இன்று (வியாழன்) மாலை பதவியேற்கவுள்ளது.
வங்கதேச ராணுவப் படைத் தளபதி வேகர்-உஸ்-ஸமான் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர் போராட்டம், மாபெரும் கிளர்ச்சியாக மாறியதைத் தொடர்ந்து அந்த நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்திலிருந்து தப்பி இந்தியா வந்தடைந்தார்.
வங்கதேசத்தில் புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையேற்க வேண்டும் என்று மாணவர் போராட்டக் குழு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, புதிதாக அமையவுள்ள அரசுக்கு முகமது யூனுஸ் தலைமை வகிக்கவுள்ளார். இந்த இடைக்கால அரசில் ஏறத்தாழ 15 பேர் இடம்பெறவுள்ளார்கள்.
ராணுவத் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"பதவியேற்பு விழா நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். பதவியேற்பு விழாவைப் பிற்பகலில் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன. ஆனால், முகமது யூனுஸ் வியாழன் பிற்பகல் 2.10 மணியளவில்தான் வங்கதேசம் வருகிறார். எனவே, இதன்பிறகு பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது கடினம். இதன் காரணமாக, இரவு 8 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் 400 பேர் வரை பங்குபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார் அவர்.
முன்னதாக, புதிய அரசுக்குத் தலைமையேற்கவுள்ள முகமது யூனுஸ் வன்முறையைக் கைவிடக் கோரி வேண்டுகோள் விடுத்தார். "புதிய உலகை அமைப்பதற்காக இளைஞர்கள் இந்தத் தலைமையை ஒப்படைத்திருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபட்டு, இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட வேண்டாம். வன்முறைதான் நம் எதிரி. மேற்கொண்டு எதிரிகளை உருவாக்க வேண்டாம். அமைதி காத்து நாட்டைக் கட்டமைக்க வேண்டும். அனைத்து விதமான வன்முறையையும் கைவிட வேண்டும்" என்று முகமது யூனுஸ் கேட்டுக்கொண்டார்.