

ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிஸுர் ரஹ்மான் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தடை விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
2026 ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் முதல் மே வரை நடைபெறவுள்ளது. அதற்காக வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் நிறைவடைந்து அணிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில், வங்கதேச வீரர் முஸ்தஃபிஸுர் ரஹ்மானைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால், இந்தியாவில் வங்கதேசத்திற்கு எதிரான சூழல் நிலவுவதால் அவரை அணியிலிருந்து விலக்கக் கோரி இந்து அமைப்புகள் வலியுறுத்தின.
முஸ்தஃபிஸுர் ரஹ்மான் நீக்கம்
இதையடுத்து கொல்கத்தா அணியிலிருந்து முஸ்தஃபிஸுர் ரஹ்மானை நீக்கி, அவருக்கு பதிலாக வேறு வீரரைச் சேர்க்க பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கொல்கத்தா அணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஐபிஎல் ஒழுங்குமுறை ஆணையமான பிசிசிஐ வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக முஸ்தஃபிஸுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க அறிவுறுத்தியுள்ளதை உறுதிப்படுத்துகிறோம். அவருக்குப் பதிலாக விளையாடுபவர் பற்றிய கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” என்று கூறியிருந்தது.
இந்தியாவுக்கு வர மறுப்பு
வங்கதேச அரசு ஆலோசகர் ஆசிப் நஜ்ருல், சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: “பயங்கரமான இனவாத குழுக்களின் கொள்கையை ஏற்று வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிஸுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டபோது வங்கதேச வீரருக்குப் பாதுகாப்பு தர முடியாத நிலை உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால், டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் ஆட்டங்களை இலங்கையில் நடத்த வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் ஒளிபரப்புக்குத் தடை
இந்நிலையில், வங்கதேசத்தில் ஐபிஎல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
“2026 மார்ச் 26 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச நட்சத்திர வீரர் முஸ்தஃபிஸுர் ரஹ்மானை நீக்கி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு பிசிசிஐ எந்த தர்க்கரீதியான காரணமும் தெரிவிக்கவில்லை. மேலும் இதுபோன்ற முடிவு வங்கதேச மக்களிடம் காயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மறு உத்தரவு வரும் வரை இந்தியன் பிரீமியர் லீகின் (ஐபிஎல்) அனைத்து விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளின் விளம்பரம்/ஒளிபரப்பை நிறுத்துமாறு உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு பொருத்தமான அதிகாரிகளின் ஒப்புதலுடனும் பொது நலனுக்காகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
The Bangladeshi government has announced a ban on broadcasting IPL-related programs after Bangladesh player Mustafizur Rahman was dropped from the KKR team in the IPL.