கெடு விதித்த போராட்டக்காரர்கள்: வங்கதேச உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜினாமா

வங்கதேச உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக அறியப்படுபவர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

வங்கதேச உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன், போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க ராஜினாமா செய்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர் போராட்டம், மாபெரும் கிளர்ச்சியாக மாறியதைத் தொடர்ந்து அந்த நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த திங்கள் அன்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்திலிருந்து தப்பி இந்தியா வந்தடைந்தார்.

வங்கதேசத்தில் புதிதாக அமையும் இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற 84 வயது முகமது யூனுஸ் தலைமையேற்க வேண்டும் என்று மாணவர் போராட்டக் குழு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவரது தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாணவர்கள் போராட்டக் குழு உச்ச நீதிமன்றத்தைச் சூழ்ந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் உள்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மேலும், பகல் 1 மணிக்குள் ராஜினாமா செய்யவில்லையென்றால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் வீடு முற்றுகையிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்கள்.

இதற்கு அடிபணிந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன், ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக அறியப்படுபவர். ஷேக் ஆட்சியில் கடந்தாண்டுதான் இவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, வங்கதேச வங்கி ஆளுநர் அப்துல் ரௌஃப் தலுக்தர் ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in