
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்து வங்கதேச சர்வதேச குற்றங்களுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெற்ற போராட்டத்தில் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றங்களுக்கான தீர்ப்பாயம் இதுதொடர்பாக 46 நபர்கள் மீது கைது ஆணை பிறப்பித்துள்ளது. நாட்டைவிட்டு வெளியேறிய அவாமி கட்சியின் மூத்த தலைவர்களும் இதில் அடக்கம்.
வங்கதேச இடைக்கால அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றது.
இதன் பகுதியாகவே ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இவரை நவம்பர் 18-க்குள் ஆஜர்ப்படுத்த வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேச அமைப்புகள் தேவைப்பட்டால் இன்டர்போல் உதவியை நாடலாம் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் ஷேக் ஹசீனா வங்கதேசத்திடம் ஒப்படைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா, வங்கதேசம் இடையே 2013-ல் குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2016-ல் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலிருந்து தப்பியோடும் குற்றவாளிகள், குறிப்பாக வடகிழக்கு பகுதிகளிலிருந்து வங்கதேசம் தப்பித்து தலைமறைவாகி வந்ததால் இரு நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
குற்றவாளிகளை ஒப்படைப்பதில் விதிவிலக்கு ஏதேனும் உள்ளதா?
அரசியல் காரணங்களுக்கான குற்றமாகக் கருதப்பட்டால் குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கலாம். இதற்கு ஒப்பந்தத்தில் இடமுண்டு. ஆனால், இதற்கென ஒரு பட்டியல் உள்ளது. இந்தக் குற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவை அரசியல் காரணங்களாகக் கருதப்படாது.