

அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
ஈரான் அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி கடந்த பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கையாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மட்டுமன்றி அமெரிக்கப் படைகள் முகாம் கொண்டுள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அஜர்பைஜானைத் தாக்கிய ஈரான்
தொடர்ந்து 6-வது நாளாக அமெரிக்கா & இஸ்ரேல் - ஈரான் போர் தொடரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கிருந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் ஈரான் தனது அண்டை நாடான அஜர்பைஜான் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
வெளியுறவுத்துறை கண்டனம்
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் 5 அன்று மதிய நேரத்தில், இஸ்லாமிய குடியரசு ஈரானின் பிரதேசத்திலிருந்து அஜர்பைஜான் குடியரசின் நக்ச்சிவான் தன்னாட்சி குடியரசுக்கு எதிராக டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு டிரோன் நக்ச்சிவான் தன்னாட்சி குடியரசில் உள்ள விமான நிலைய கட்டடத்தைத் தாக்கியது. மற்றொரு டிரோன் ஷகராபாத் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக் கட்டடத்திற்கு அருகில் விழுந்தது ஈரானின் பிரதேசத்திலிருந்து நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனால் விமான நிலையக் கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
அஜர்பைஜான் திருப்பித் தாக்காது
அஜர்பைஜான் குடியரசின் பிரதேசத்திற்கு எதிரான இந்தத் தாக்குதல், சர்வதேச சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவது. இது நாட்டில் பதற்றத்தை அதிகரிக்கும் செயலாகும். ஈரானிடமிருந்து, இந்த விவகாரம் குறித்து மிகக் குறுகிய காலத்திற்குள் தெளிவான விளக்கத்தை வழங்குமாறும், உரிய விசாரணை நடத்துமாறும் இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறும் நாங்கள் கோருகிறோம். அஜர்பைஜான் தரப்பு உரிய பதிலடி நடவடிக்கைகளை இப்போதைக்கு எடுக்கப்போவதில்லை. ஈரானின் தூதர் மொஜ்தபா டெமிர்சிலோவிடம் அஜர்பைஜானின் வலுவான எதிர்ப்பு தொடர்புடைய குறிப்புகள் சமர்ப்பிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Azerbaijan complaints about drone attacks against the Nakhchivan Autonomous Republic by Islamic Republic of Iran