உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்தது. இது கோவிஷீல்ட் என்ற பெயரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தப்பட்டது.
இதன் பிறகு பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி ஸ்காட் என்ற நபர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் தன்னுடைய மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், பாதிக்கப்பட்ட பலரும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில், “கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்” என இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
இதைத் தொடர்ந்து கோவிட் தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி அந்நிறுவனம் கோவிட் தடுப்பூசியை தயாரிப்பதையும், விநியோகம் செய்வதையும் நிறுத்தப் போவதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் சார்பில், “வணிக காரணங்களுக்காகவும், கோவிட் தடுப்பூசியின் தேவை குறைந்துள்ளதாலும் அதனை திரும்பப் பெறுகிறோம். இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது” என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐரோப்பாவில் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பம் கடந்த மார்ச் மாதம் அளிக்கப்பட்டது.