
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக மேற்கொண்டுவரும் உரைகளைத் தடுக்கக்கோரி முன்வைத்த கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததற்காகக் கூறி, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் விமர்சித்தார்.
மேலும், ஷேக் ஹசீனாவின் இத்தகைய உரைகள் வங்கதேசம் முழுவதும் கோபத்தைத் தூண்டுவதாக இருப்பதாகவும் யூனுஸ் கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள சாத்தம் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய யூனுஸ், பிரதமர் மோடியுடனான ஒரு உரையாடலை நினைவு கூர்ந்தார். அவர் பேசியதாவது,
`பிரதமர் மோடியுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நீங்கள் அவரை (ஷேக் ஹசீனா) வரவேற்க விரும்பினால் அந்த கொள்கையை கைவிட நான் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது.. ஆனால் தற்போது நடப்பதைப்போல் இல்லாமல் வங்கதேச மக்களிடம் அவர் பேசாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்களுக்கு உதவுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன்’ என்றார்.
அதற்கு, `அது சமூக ஊடகம், அதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது’ என்று யூனுஸிடம் பிரதமர் மோடி பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பதிலை முன்வைத்து, உரையின்போது குற்றம்சாட்டிப் பேசிய யூனுஸ், `நீங்கள் என்ன சொல்ல முடியும்? இது வெடிக்கும் சூழலில் உள்ளது, இதை சமூக ஊடகம் என்று சொல்லிவிட்டு நீங்கள் விலகிவிட முடியாது’ என்றார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், `இந்தியா வங்கதேசம் எதிர்பார்த்ததைச் செய்கிறதா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, `இல்லை’ என்று யூனுஸ் தயக்கமின்றி பதிலளித்தார். மேலும், ஹசீனாவை நாடு கடத்தக்கோரி இந்திய அரசாங்கத்திற்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.
வங்கதேச பிரதமர் பொறுப்பில் இருந்த 2024 ஆகஸ்டில் ஷேக் ஹசீனா அகற்றப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.