
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். இந்த மரணங்களுக்கு வவ்வால்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் அடையாளம் தெரியாத மர்ம நோய் பரவி வருகிறது. இந்த நோயால் இதுவரை 419 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகலளித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
எபோலா, மார்பர்க் மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான அறிகுறிகளை ஒத்து இந்த புதிய நோயின் அறிகுறிகள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து பார்த்ததில் மேற்கூறிய நோய்களால் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முதன்முதலாக, வடக்கு காங்கோவில் உள்ள பொலோகோ கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் வவ்வால் கறியை உண்ட 48 மணி நேரத்திற்குள் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்தே அப்பகுதி மக்களிடையே மர்ம நோயின் பரவல் அதிகரித்துள்ளது. எனினும், மர்ம நோய்க்கான காரணத்தை கண்டறிய அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
வன விலங்குகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை ஒட்டி வவ்வால்கள் உள்ளிட்ட வன விலங்குகளை உட்கொள்ளவேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு காங்கோ அரசு அறிவுறுத்தியுள்ளது.