
அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து, சுமார் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டு வந்த சுங்க வரியில் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் சீனாவில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வந்த அமெரிக்க சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக, சீனாவில் உருவாக்கப்படும் சிப் போன்ற மின்னணு உதிரிபாகங்களை இறக்குமதி செய்து தங்களின் தயாரிப்புகளில் உபயோகிக்கும் ஆப்பிள் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், அதிபர் டிரம்பை சந்தித்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து, சுமார் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
தேசத்தின் எதிர்காலத்திற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.
இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிம் குக், `ஒரு பெருமைமிக்க அமெரிக்க நிறுவனமாக, அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க வகையில் முதலீடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமெரிக்காவில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவிருக்கிறோம்’ என்றார்.