இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஏறத்தாழ 40 சதவீதம் அளவிலான வாக்குகளைப் பெற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கிறார் 55 வயதான அநுர குமார திசாநாயக்க.
இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். ஒரு வேளை அநுர குமாரவுக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் அவர் இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போதைய நிலவரப்படி சஜித் பிரேமதாசாவுக்கு 33.5 சதவீத வாக்குகளும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு 17 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
இந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் போட்டியிட்டார், மார்க்ஸிய சிந்தாந்தத்தைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க. 1968-ல் அனுராதபுரத்தில் பிறந்த அநுர குமார, 1987-ல் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியில் இணைந்து 2014-ல் அதன் தலைவரானார்.
2019 அதிபர் தேர்தலில் 3.16 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார் அநுர குமார. இதைத் தொடர்ந்து 2022-ல் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டபோது, அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார் அநுர குமார. இதை அடுத்து இலங்கை மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு உயர ஆரம்பித்தது.
மாற்றத்தை முன்னிறுத்தி அதிபர் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட அநுர குமாரவுக்கு இலங்கை மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் காலை 11.30 மணி நேர நிலவரப்படி 40 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறார் அநுர குமார திசாநாயக்க.
அநுர குமாரவுக்கு 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், இந்த வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அநுர குமாரா, சஜித் பிரேமதாசா ஆகியோர் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
எனவே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவர இன்னமும் சில மணி நேரங்கள் ஆகும் எனத் தெரிகிறது.