ஜனதா விமுக்தி பெரமுனா கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (செப்.21) நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 4 மணி அளவில் நிறைவுபெற்ற வாக்குப் பதிவில் மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. வாக்குப் பதிவு நிறைவுபெற்றதும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த ஜனதா விமுக்தி பெரமுனா கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க, தேர்தலில் பதிவான வாக்குகளில் 42.31 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இலங்கை அதிபராக நாளை (செப்.23) அநுர குமார பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசாவுக்கு 32.76 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
2022-ல் அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைக்கு பிறகு இலங்கை அதிபராகத் தேர்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு இந்தத் தேர்தலில் 17.27 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு 1.70 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், தன் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளக் கணக்கில் அநுர குமார பதிவிட்டவை பின்வருமாறு:
`இந்த வெற்றி நம் அனைவருக்குமானது. நம்பிக்கையினாலும், எதிர்பார்ப்பினாலும் நிரம்பியுள்ள லட்சக்கணக்கான கண்கள் எங்கள் முன்னோக்கி நகர்த்துகின்றன. இலங்கையின் வரலாற்றை மாற்றி எழுத நாங்கள் தயாராக இருக்கிறோம். சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள ஒற்றுமை இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும். நாம் அனைவரும் கைகோர்த்து, வருங்காலத்தை உருவாக்குவோம்’ என்றார்.