ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுக்குரியின் கணவர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பு குடியரசுக் கட்சி சார்பில் தன் துணை அதிபர் வேட்பாளராக ஒஹையோ மாகாணத்தின் செனட் சபை உறுப்பினரான ஜே.டி. வான்ஸை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்.
அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால், அவருடன் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வான்ஸ், புகழ்பெற்ற யேல் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தபிறகு கார்ப்பரேட் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்தியாவின் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுக்குரியை யேல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாகச் சந்தித்தார் வான்ஸ். முதலில் நண்பர்களாகப் பழகிய இவர்கள் இருவரும் பின்னர் காதலர்களாக மாறினர். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014-ல் இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி இவர்களின் திருமணம் செய்துகொண்டனர்.
வான்ஸ் தம்பதியினருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். உஷா சிலுக்குரியின் பெற்றோர் ராதா கிருஷ்ணா மற்றும் லட்சுமி ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் பணி நிமித்தமாக கடந்த 1970-களில் அமெரிக்காவுக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். இவர்களின் மகளாக 1986-ல் கலிஃபோர்னியாவில் பிறந்தார் உஷா சிலிக்குரி.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வெற்றியால் ஆந்திராவின் மருமகனான ஜெ.டி. வான்ஸ் அமெரிக்காவின் 50-வது துணை அதிபராகப் பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`ஜே.டி. வான்ஸ் பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் ஆந்திராவில் தன் வேர்களைக் கொண்ட திருமதி. உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் தெலுங்கு பாரம்பரியத்தைக் கொண்ட முதல் பெணாகிறார். உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு சமூகத்துக்கு இது பெருமையான தருணமாகும்’ என்றார்.