பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் 201 வாக்குகளைப் பெற்றார் ஷெபாஸ் ஷரிஃப்.
ஷெபாஸ் ஷரிஃப் (கோப்புப்படம்)
ஷெபாஸ் ஷரிஃப் (கோப்புப்படம்)ANI
1 min read

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாட்டின் 24-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஷெபாஸ் ஷரிஃப் 201 வாக்குகளைப் பெற்றதாகவும், பிடிஐ மற்றும் சன்னி இடெஹத் கவுன்சில் (எஸ்ஐசி) பிரதமர் வேட்பாளர் ஓமர் ஆயுப் கான் 92 வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் அறிவித்துள்ளார்.

336 உறுப்பினர்கள் கொண்ட அவையில் வெற்றிக்கு 169 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் 201 வாக்குகளை ஷெபாஸ் ஷரிஃப் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, மார்ச் 4-ல் ஷரிஃப் பதவியேற்கிறார். தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக மூத்த சகோதரர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஷெபாஸ் நன்றி தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்ற கலைக்கப்படும் வரை ஏப்ரல் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை பாகிஸ்தான் பிரதமராக ஷரிஃப் செயல்பட்டார்.

நாடாளுமன்றம் கூடியதிலிருந்து பிடிஐ மற்றும் எஸ்ஐசி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டார்கள். எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷெபாஸ் ஷரிஃப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in