
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 205 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, அந்நாட்டின் சான் ஆன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு அமெரிக்க இராணுவத்தின் சி-17 ரக விமானம் ஒன்று கிளம்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் தர மறுத்துவிட்டாலும், சட்டவிரோத குடியேற்றத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை இத்தகைய நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்துவதாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்ததாக இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவிற்கு அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் சுமார் 15 லட்சம் நபர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளார் அதிபர் டிரம்ப். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களின் பட்டியலை முதற்கட்டமாக தயார் செய்துள்ளது அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை.
சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் எண்ணிக்கையிலான இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளதாகவும், மெக்ஸிகோ, எல் சால்வடார் நாட்டு மக்களைத் தொடர்ந்து 3-வது அதிக சட்டவிரோத குடியேற்றவாசிகளாக இந்திய மக்கள் இருப்பதாகவும் குடியேற்றம் தொடர்பான தனியார் ஆய்வு மையமான பியூ ரிசர்ச் சென்டர் தகவலளித்துள்ளது.
மேலும், எல் பாசோ, டெக்சாஸ், சான் டியாகோ ஆகிய அமெரிக்க நகரங்களில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளை கௌதமாலா, பெரு, ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப அமெரிக்க ராணுவம் விமானங்களை வழங்கியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.