
அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட், 14-ம் லியோ என்ற பெயரில் 267-வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 அன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நேற்றைக்கு முந்தைய தினம் (மே 7) தொடங்கியது.
இந்நிலையில், கார்டினல்கள் மாநாட்டில் புதிய போப் தேர்வானதை குறிக்கும் வகையில் வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து நேற்று (மே 8) இரவு வெண்புகை வெளியேற்றப்பட்டது. அத்துடன், புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய மணிகள் ஒலித்தன.
இதைத் தொடர்ந்து, புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்ட கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட், வாடிகனின் புனித பீட்டர் தேவாலயத்தில் இருந்து மக்களுக்குக் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகளில் மக்களிடையே உரையாற்றினார்.
267-வது போப்பாக தேர்வாகியுள்ள பெர்வோஸ்ட், இனி போப் 14-ம் லியோ என்று அழைக்கப்படுவார்.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையை போப் 14-ம் லியோ பெற்றார். 69 வயதான 14-ம் லியோ தென் அமெரிக்க நாடான பெருவில் பிஷப்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2025-ல் கார்டினல் பிஷப்பாக போப் பிரான்சிஸால் அவர் நியமிக்கப்பட்டார்.