
அமெரிக்க அதிபராகவுள்ள டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்தில், இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாளை (ஜன.20) அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் அந்நாட்டின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்பும், 49-வது துணை அதிபராக ஜெ.டி. வான்ஸும் பதவியேற்கவுள்ளனர்.
பதவியேற்பு நிகழ்வுக்கு முன்பு வாஷிங்டன் டி.சி.யில் இன்று (ஜன.19) டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, பிரபல தொழிலதிபர்கள் பங்கஜ் பன்சால், கல்பேஷ் மேத்தா ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்திய அரசு சார்பில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதில் பங்கேற்பார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்குப் பதில், சீன துணை அதிபர் ஹான் ஜெங் இந்நிகழ்வில் பங்கேற்பார் என சீன அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்வுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் அவர்களின் இணையர்களுடன் பங்கேற்பது மரபாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை (ஜன.20) நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கும் நிலையில், அவரது மனைவி மிட்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.