ஷேக் ஹசீனா - செயின்ட் மார்டின் தீவு - அமெரிக்கா: பின்னணி என்ன?

"வங்கதேசத்தில் விமானப் படைத் தளத்தை அமைத்துக்கொள்ள ஒரு நாட்டை அனுமதித்தால், எனக்கு எந்தச் சிக்கலும் இருக்காது." - கடந்த மே மாதம் ஹசீனா பேசியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறைக்கும் தான் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாகவும் ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றதையடுத்து, அந்த நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். ஷேக் ஹசீனா தற்போது தற்காலிகமாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். வங்கதேசத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது.

கடந்த 5 அன்று இந்தியா வந்ததிலிருந்து ஷேக் ஹசீனா எதுவும் பேசாமல் இருந்தார். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு தான் நிகழ்த்தவிருந்த உரையின் கடிதம் வெளியானது. இதில் அமெரிக்காவின் சதிதான் காரணம் என ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, "செயின்ட் மார்டின் தீவின் இறையாண்மையைத் தியாகம் செய்து, வங்கக் கடலின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள அமெரிக்காவை அனுமதித்திருந்தால், நான் ஆட்சியில் தொடர்ந்திருப்பேன்" என்று ஹசீனா இதில் குறிப்பிட்டிருந்தார்.

செயின்ட் மார்டின் தீவு எங்கு உள்ளது?

செயின் மார்டின் தீவு என்பது வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கக் கடலின் வடகிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. வங்கதேசத்துக்குத் தெற்குப் பகுதியில் உள்ளது. வெறும் 3 சதுர கிலோமீட்டர் நிலம்தான் இந்த தீவு. மியான்மரிலிருந்து வெறும் 8 கி.மீ. தொலைவில்தான் இந்தத் தீவு அமைந்துள்ளது. இங்கு விமானப் படைத் தளத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை மறைமுகமாகப் பேசியதும் ஷேக் ஹசீனாதான்.

ஆட்சியிலிருந்தபோது ஷேக் ஹசீனா பேசியது என்ன?

வங்கதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு கடந்த மே மாதம் பேசிய அவர், தன்னுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். வங்கதேசம் மற்றும் மியான்மரிலிருந்து, புதிய கிறிஸ்தவ நாட்டை உருவாக்க ஒரு நாடு சதித் திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், வங்கதேசத்தில் விமானப் படைத் தளத்தை அமைத்துக்கொள்ள அந்த நாட்டை அனுமதித்தால், எனக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்றும் ஷேக் ஹசீனா கடந்த மே மாதம் பேசியிருந்தார்.

அமெரிக்காவின் கருத்துகள்:

இதுமட்டுமின்றி அமெரிக்காவின் சமீபத்திய கருத்துகளும் இங்கு கவனம் பெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நேர்மையான முறையில் ஆட்சிக்கு வரவில்லை என அமெரிக்கா சுட்டிக் காட்டியது. ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா நீண்ட காலமாக விரும்பி வருவதாக அந்த நாடு தெரிவத்தது. மேலும், புதிய ஆட்சி ஜனநாயகத் தன்மையுடன் அனைவரையும் உள்ளடக்கியும் செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியது.

இவற்றின் தொடர்ச்சியாகதான் ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டும், ஷேக் ஹசீனா உரையில் குறிப்பிட்டதும், அமெரிக்காவின் நிலைப்பாடும் ஒரு புள்ளியில் இணைகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in