ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்!
படம் - twitter.com/navalny

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்!

சிறையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது நவால்னி மயங்கி விழுந்ததாகவும்...
Published on

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 47.

எதிர்கால ரஷியா (Russia of the Future) என்கிற கட்சியின் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷிய அதிபர் புடினைத் தீவிரமாக எதிர்த்ததுடன் புடினுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி உலகளவில் கவனம் பெற்றார். யூடியூப் உள்பட சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி புடினின் ஆட்சியில் நடைபெறும் ஊழல்களைப் பற்றி விரிவாகப் பேசினார். இதனால் ரஷியாவில் பல போராட்டங்கள் நடைபெற்றன. இதுபோன்ற செயல்களால் புடினின் அதிதீவிர எதிரியாகப் பார்க்கப்பட்டார்.

2020-ல் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார் நவால்னி. ஜெர்மனியில் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவருக்கு விஷம் வைக்கப்பட்டது உறுதியானது. புடின் தான் தன் மீது விஷத்தைப் பரப்பி கொல்ல முயற்சித்தார் எனப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார். 2021 ஜனவரியில் ரஷியாவுக்கு மீண்டும் திரும்பினார் நவால்னி. ஏற்கெனவே பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருந்தன. பரோல் விதிமுறைகளை மீறியதாக விமான நிலையத்திலேயே நவால்னியைச் சிறையில் அடைத்தது ரஷிய அரசு.

தீவிரவாதத்தைத் தூண்டுதல் உள்பட பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நவால்னி, 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ரஷியாவின் ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது நவால்னி மயங்கி விழுந்ததாகவும் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் ரஷிய சிறைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in