அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ப்ளோரிடா மாகாணத்தில் வைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரை ரகசியப் படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
நேற்று (செப்.15) அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள அவருக்குப் சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதில் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார் டிரம்ப்.
இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட பிறகு கருப்பு நிற காரில் தப்பிச் சென்ற ரயான் வெஸ்லி ரௌத் என்பவரைப் பின் தொடர்ந்து சென்று ரகசியப் படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்றும், ஒரு கோ ப்ரோ வகையைச் சேர்ந்த கேமரா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என்று அவரது தேர்தல் பரப்புரை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் பென்னிசில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் துப்பாக்கி குண்டு அவரது வலது காதை உரசிச் சென்று காயத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் டிரம்புக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பதை அறிந்து நிம்மதிகொள்ளவதாகவும், அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.