
பிரதமர் மிச்செல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிபெற்றதை அடுத்து, அதிபர் இமானுவேல் மாக்ரோன் பதவி விலக எதிர்க்கட்சியினர் போர்க்கொடு தூக்கியுள்ளனர்.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 577 இடங்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாமன்றத்தின் கீழ் அவைக்குத் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியமைக்க 289 இடங்கள் தேவைப்படும் நிலையில், இடதுசாரிகள் கூட்டணிக்கு 187 இடங்களும், அதிபர் மாக்ரோனின் மையவாத கூட்டணிக்கு 159 இடங்களும், வலதுசாரிகள் கூட்டணிக்கு 142 இடங்களும் கிடைத்தன.
எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நீண்ட அரசியல் அனுபவம் மிக்க 73 வயதான மிச்செல் பார்னியரை பிரதமர் பதவிக்கு நியமித்தார் அதிபர் மாக்ரோன். ஆனால் நாடாளுமன்ற கீழ் அவையின் ஒப்புதல் இல்லாமல் 2025-ம் நிதியாண்டுக்கான அந்நாட்டு பட்ஜெட்டை நிறைவேற்ற பார்னியர் முயற்சி செய்தது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆத்திரப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பிரதமர் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நேற்று (டிச.4) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் நிறைவேற 288 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 331 வாக்குகள் கிடைத்ததால், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் 2 மாதங்கள் மற்றும் 29 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்துள்ள மிச்செல் பார்னியர் இன்று (டிச.5) காலை தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனால் புதிய பிரதமரை நியமிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அதிபர் இமானுவேல் மாக்ரோன். அதேநேரம் அதிபர் மாக்ரோனும் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.