
ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு தங்கள் நாட்டின் மீது சுமார் 340 ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக இன்று (நவ.25) தகவல் தெரிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
நேற்று (நவ.24) லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் ஏறத்தாழ 29 நபர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்தது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த லெபனானின் காபந்து பிரதமர், `இந்த தாக்குதல் செய்தி நடந்துகொண்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்கிறது, ’
இந்நிலையில், நேற்றைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது ஹிஸ்புல்லா. சுமார் 340 ஏவுகணைகளையும், டிரோன்களையும் உபயோகித்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 11 நபர்கள் காயமடைந்துள்ளதாகவும், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வானொலி தகவல் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் சிலவற்றை நடுவானிலேயே சிதறடித்துள்ளது இஸ்ரேல். பரஸ்பரம் தாக்குதல் நிகழ்த்தி வந்தாலும், இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தில் ஈடுபடும் வகையிலான பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
மேலும், மழைக்காலம் தொடங்குவதை ஒட்டி, அதனால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளால் காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா சபையின் நிவாரண அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.