

இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் நதி நீரை நிறுத்தும் வகையில் தடுப்பணைகளைக் கட்ட முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் துராந்த் கோடு என்ற இடத்தில் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த இடத்தில் வேலிகள் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்குதலில் ஈடுபட்டன. இந்தத் தாக்குதலில் இருதரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பின்னர் கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் குனார் ஆற்றில் அணைகள் கட்டுவதை விரைவில் தொடங்கவும், உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் தாலிபன் உச்ச தலைவர் மாவ்லாவி ஹிபாதுல்லாஹ் அகுண்ட்ஸாதா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் ராணுவம் எக்ஸ் தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக மூன்று மேற்கு நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்ளும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது. இந்த நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து, தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தான் அரசும், அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி, வெளியுறவுக் கொள்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு அனுமதியுடன் இந்தியா வந்து சென்றார்.
Afghanistan is set to stop river water flowing into Pakistan by building dams across the Kunar River, mirroring India's suspension of the Indus Waters Treaty following the April 22 terror attack in Jammu and Kashmir's Pahalgam.