
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1400 ஆக உயர்ந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் செப்டம்பர் 1-ம் தேதி (நேற்று) அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாக்ரிகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் தப்பிக்க வழி இன்றி பலர் இடிபாடுகளில் சிக்கினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் துயரமான சம்பவமாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், தொலைதூரப் பகுதிகள் மற்றும் சாலை வசதிகள் இல்லாதது மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு அவசர உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மருத்துவக் குழுக்கள், அத்தியாவசியப் பொருட்கள், மற்றும் தற்காலிக முகாம்களை அமைப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக அவை உறுதியளித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்த நிலநடுக்கம் மக்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1400 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி 2,800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.