வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலில் இதுவரை 6 பேர் பலி, ஒருவர் மாயம்: வெளியுறவுத்துறை விளக்கம் | MEA |

வளைகுடா நாடுகளின் கடற்பகுதியில் பயண நிலைமை படிப்படியாக மேம்படுகிறது....
6 Indians dead, 1 missing in Gulf incidents; 3 lakh passengers return to India since Feb 28: MEA
வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலில் இதுவரை 6 பேர் பலி, ஒருவர் மாயம்: வெளியுறவுத்துறை விளக்கம்
1 min read

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து 3 லட்சம் இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதன் எதிர்வினையாக ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளிடையே பதற்றம் நிலவுகிறது. இதனைக் கூர்ந்து கவனித்து வரும் இந்தியா, வளைகுடா நாடுகளின் தலைவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அப்பகுதிகளில் உள்ள இந்தியர்களின் நலன் குறித்து விசாரித்து வருகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் இருந்து 3 லட்சம் இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தில்லியில் வெளியுறவுத் துறையில் வளைகுடா நாடுகளின் கூடுதல் செயலாளர் அசீம் மஹாஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

6 பேர் உயிரிழப்பு

“ஈரான் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். சவுதி அரேபியா, ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள நமது தூதரகங்கள் காணாமல் போன இந்தியரைக் குறித்தும், இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளன. வளைகுடா நாடுகளின் கடற்பகுதியில் பயண நிலைமை படிப்படியாக மேம்படுகிறது. ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையிலான பயணிகள் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.

விமானப் போக்குவரத்து மேம்பாடு

வளைகுடா நாடுகளின் விமானப் போக்குவரத்து நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. பிப்ரவரி 28 முதல், சுமார் 3 லட்சம் பயணிகள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பத்திரமாகத் திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அட்டவணையற்ற விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு வருகின்றன. இன்று மீண்டும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 90 விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார்... குவைத்... பஹ்ரைன்...

கத்தார் வான்வெளி பகுதி ஓரளவு திறக்கப்பட்டுள்ளதால், கத்தார் ஏர்வேஸ் இன்று இந்தியாவுக்கு 10 வணிக விமானங்களை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவைத் வான்வெளி பகுதி இன்னும் மூடப்பட்டுள்ளது. குவைத் ஏர்வேஸ், சவுதி அரேபியாவின் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு வணிக விமானங்களைத் தொடங்கவுள்ளது; இன்று முதல் விமானம் கொச்சிக்கு இயக்கப்படும். இது குவைத்தில் உள்ள இந்திய குடிமக்களின் இந்தியாவுக்கு பயணத்தை எளிதாக்கும். பஹ்ரைன் வான்வெளி பகுதி இன்னும் மூடப்பட்டுள்ளது. பஹ்ரைனின் கல்ஃப் ஏர், சவுதி அரேபியாவின் விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு சிறப்பு வணிக விமானங்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறது” என்றார்.

Summary

6 Indians dead, 1 missing in Gulf incidents; 3 lakh passengers return to India since Feb 28: MEA

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in