
குவைத்தில் மங்காஃப் நகரில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு மங்காஃப் நகரில் அமைந்துள்ளது. இந்தக் குடியிருப்பில் ஏறத்தாழ 200 தொழிலாளர்கள் வசித்து வந்துள்ளார்கள். தொழிலாளர்கள் மட்டுமே வசித்து வரும் குடியிருப்புக் கட்டடம் இது.
குடியிருப்புக் கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள வீட்டு சமையலறையில் இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது மளமளவென கட்டடம் முழுக்கப் பரவியது. இதில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கேரளத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிடுகையில், "குவைத் தீ விபத்து சம்பவத்தை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. நம் தூதரக அதிகாரி முகாமுக்குச் சென்றுள்ளார். கூடுதல் தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்த அவர், நம் தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.