
12 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அமெரிக்காவில் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில், மேலும் 36 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்த தடையை நீட்டிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற கையோடு அமெரிக்காவில் குடியேற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கானோரை திருப்பி அனுப்பும் பணியில் அந்நாட்டு வெளியுறவுத்துறை ஈடுபட்டுவந்தது.
இந்த நடவடிக்கைகளின் நீட்சியாக, அண்மையில் 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது பூடான், கம்போடியா, எகிப்து, உகாண்டா, காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா, எத்தியோப்பியா, கானா, நைஜர், தெற்கு சூடான், சிரியா, ஜிம்பாப்வே, காம்பியா, அங்கோலா, காமெரூன் உள்பட 36 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பதற்காக கோப்பு தயாராக உள்ளதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கையொப்பமிட்ட இந்த கோப்பில், பல விஷயங்கள் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அரசால் பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகளை 60 நாட்களுக்குள் மேற்கொள்ளாவிட்டால், சம்மந்தப்பட்ட நாடுகளின் குடிமக்கள் முழுமையாக அல்லது பகுதியளவில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் சில நாடுகளின் குடிமக்களைத் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசுகள் அமெரிக்க அரசுக்குப் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்பது பிரதானமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாக உள்ளது.