
அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை வழங்க நிபந்தனை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868 முதல் அமலில் இருந்து வந்தது. 14-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் வழங்கிய இந்த `பிறப்பால் குடியுரிமை’ விதியில் மாற்றம் மேற்கொள்ளும் உத்தரவை, அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற கையோடு கடந்த ஜன.20 பிறப்பித்தார் டொனால்ட் டிரம்ப்.
இந்நிலையில், டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அமெரிக்க தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பான அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் நலனுக்கான அமைப்புகள் போன்றவை 2 வழக்குகள் தொடர்ந்துள்ளன.
அத்துடன், ஜனநாயகக் கட்சி ஆட்சி நடைபெறும் 22 அமெரிக்க மாகாணங்களும், கொலம்பியா மாவட்ட நிர்வாகமும் இணைந்து பாஸ்டன் மற்றும் சியாட்டல் ஃபெடரல் நீதிமன்றங்களில் இரு வழக்குகள் தொடர்ந்துள்ளன. தன் அதிகார வரம்பிற்குள் வராத விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை டொனால்ட் டிரம்ப் மீறியுள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாசசூசெட்ஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞர் ஆண்ட்ரியா ஜாய் காம்பெல், `அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்க டிரம்பிற்கு அதிகாரம் இல்லை. அவரது உத்தரவு செயல்படுத்தப்பட்டால் வருடத்திற்கு சுமார் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்படும்’ என்றார்.