கடந்த ஒரு வாரத்தில் 20 ஏவுகணைகள், 800 வான்வழி குண்டுகள், 500 டிரோன்களை உபயோகித்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி.
ரஷ்யா நடத்தும் தாக்குதல் குறித்து தன் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`எங்கள் சமூகங்களையும், நகரங்களையும் ஒவ்வொரு நாளும் ரஷ்யா தாக்குகிறது. இவை எங்கள் மக்களுக்கு எதிராக எதிரிகளால் திட்டமிடப்பட்ட பயங்கரவாதமாகும். இந்த வாரம் மட்டும் உக்ரைனுக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட பல வகையான ஏவுகணைகள், சுமார் 800 வான்வழி குண்டுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட டிரோன்களை உபயோகித்து ரஷ்ய பயங்கரவாதிகள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்க ஒன்றுபட்ட உலகத்தால் முடியும். தொலைதூர தாக்குதல்களை நிகழ்த்தும் ஏவுகணைகளும், வான்வழி பாதுகாப்பு அமைப்புகளும் உக்ரைனுக்குத் தேவை. இதைப் புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைத்து நட்பு நாடுகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.
இந்தப் பதிவுடன் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த காணொளியை வெளியிட்டுள்ளார் ஜெலென்ஸ்கி. அதில் உக்ரைனுக்கு நிறைய வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய தாக்குதல், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்திங்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்திவருகிறது ரஷ்யா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.